குறுக்கு வழியில் சென்று த.வெ.க ஆட்சியை கவிழ்க்க திமுக சதி… * மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பரபரப்பு பேச்சு..!
மதுராந்தகம் இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான விஜய் இன்று (செப். 25) ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே பரப்புரை மேற்கொண்டார். கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு பெற்ற 5,000 பேருக்கு மட்டுமே கூட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாஸ் இல்லாதவர்களும் அனுமதிக்கப்பட்டனர். மதுராந்தகத்தில் என்ட்ரி ஆனவுடன் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், அங்கிருந்து ரோடு ஷோ மேற்கொண்ட நிலையில், மதியம் 2-30 மணி அளவில் பிரச்சார மேடையை வந்தடைந்தார். அங்கு முதல்வருக்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து
தமிழ் தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. பின்னர் அமைச்சர்கள் என்.ஆனந்த், ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, வேட்பாளர் மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் பேசினர். பிரச்சாரம் மேடையில் முதல்வர் விஜய் பேசியதாவது:-
என் சொந்தங்களுக்கு வணக்கம். நான் இங்கு முதலமைச்சராக வரவில்லை. உங்கள் பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாக உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன் . தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வரக்கூடாதா?, இந்த விஜய் முதல்வர் பதவிக்கு வரக்கூடாதா? . தினமும் எங்கள் மீது ஏகப்பட்ட வன்மங்கள். ஆபாச பேச்சுக்கள். சட்டசபையில் தி.மு.க. ஊழல் குறித்து சொன்னால், அப்போ விஜய் பிறக்கவே இல்லை என்று சொல்கிறார்கள். நான் எப்போ பிறந்தால் என்ன? ஊழல் என்று சொன்னால் ஆதாரம் கேட்கிறார்கள். ஆதாரம் கொடுத்தால் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். பேசு பேசு என்று சொல்கிறார்கள். ஆனால் என்னை பேச விடாமல் தடுக்கிறார்கள். அதனால் தான் சட்டசபையில் அவ்வாறு கத்தி பேசினேன். ஸ்டாலின் சார் தோற்றாலும் ஜெயிச்சாலும் அவர் என் அங்கிள். இதுவரை நான் தான் சொல்லிக் கொண்டு இருந்தேன். ரெண்டே ரெண்டு பேருக்கு இடையில் தான் போட்டி என்று. இப்போது தி.மு.க.வே சொல்லி விட்டார்கள். நான் பாலத்திற்கு இன்ஸ்பெக்ஷன் போனபோது நாங்கள் கட்டிய பாலத்தில் விஜய் ஷூட்டிங் பண்ணுகிறார் என்று சொல்கிறார். அப்படி என்றால் ரூ10000 வைத்துக்கொண்டு எப்படி பாலம் கட்டினீர்கள் என்று கேட்கிறேன். ஓ… அந்த பணத்தில் இருந்து கட்டியதா?. ஜெயலலிதா மேடமை அவதூறாக பேசிய தி.முக.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க மற்றும் பலர் நினைத்தார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தீயசக்தி என்று சொன்ன தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததால், எம்.ஜி.ஆரின் அப்பழுக்கற்ற தொண்டர்கள் மன உளைச்சலில் இருந்தனர். இதனால் தான் சிலர் ராஜினாமா செய்தார்கள். எம்.ஜி.ஆர் தொண்டர்களே… உங்களுடன் நான் இருக்கிறேன். டெல்லியில் இருக்கும் பா.ஜ.க. தான் தி.மு.க., தமிழகத்தில் இருக்கும் தி.மு.க. தான் பா.ஜ.க.
ஆட்சியை கவிழ்க்க சதி :
என் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்க முடியவில்லை என்ற கடுப்பில், விரக்தியில் தி.மு.க-வினர் ஒரு அபாயகரமான
ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். எனது சொந்தத் தாயை தப்பாக பேசும்போது கூட நான் பொறுத்துக்
கொண்டேன். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கிற என்னுடைய அம்மா, அக்கா., தங்கைகள், எனக்கு துணையாக இருக்கிற தாய் அன்பு காட்டுகிற தமிழ்நாட்டுப் பெண்களை அவர்கள் அசிங்கமாக பேசும் போது என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தி.மு.க தலைமையும் இப்படி தான் பேசுகிறார்கள், தி.மு.க குடும்பத்தில் இருந்தும் இப்படித்தான் பேசுகிறார்கள். அந்த பழக்க தோஷத்தில் ஸ்டாலின் சாரும் அந்த குடும்பத்தில் இருக்கிறவர்களும் உக்காந்து ரசிக்கிறார்கள். இனிமேல் இதை பொறுத்துக் கொள்ளவே முடியாது. ஊழல் செய்த கூட்டத்தை விடவே மாட்டோம்.
என்னை ஒன்றுமே செய்ய முடியாததால் குறுக்கு வழியில் சென்று தமிழக வெற்றிக்கழக ஆட்சியை கவிழ்க்க திமுக
சதி செய்கிறது. வீரமணி என்பவர் பல ஆண்டுகளாக சிறுமிகளை சீரழித்து வந்துள்ளார். இதனை திமுக ஆட்சியில் கண்டு கொள்ளவே இல்லை. எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டார்கள். இதுதொடர்பாக திமுகவினர் ஏன் வாய் திறப்பதில்லை?. தற்போது எனது ஆட்சியில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த இடைத் தேர்தலில் திமுக மற்றும் பலருக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.