வீடு வாங்க வழி காட்டும் ஃபேர் புரோ கண்காட்சி… * திருச்சியில் 25ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது..!
கிரடாய் அமைப்பின் திருச்சி கிளை சார்பில், செப்டம்பர் 25ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் மாபெரும் ஃபேர் ப்ரோ எக்ஸ்போ என்கிற வீடு, வீட்டுமனைகள் குறித்த கண்காட்சி நடைபெறுகிறது. தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் இந்நிகழ்வை துவக்கி வைக்கிறார்.
இதுகுறித்து திருச்சி கிரடாய் சேர்மன் மனோகரன், தலைவர் நசுருதீன் மற்றும் ‘பேர்புரோ கண்காட்சி – 2026’ சேர்மன் இளமுருகன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது, “தமிழகத்தில் முக்கியமாக வளர்ந்து வரும் நகரமான திருச்சிராப்பள்ளியில் கிரடாய், திருச்சி சார்பில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கான விற்பனை கண்காட்சியானது செப்டம்பர் 25, 26 மற்றும் 27 தேதிகளில் திருச்சி கலையரங்கத்தில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியை மக்கள் இலவசமாக பார்த்து தங்களுக்கு தேவையான வீடுகள் மற்றும் கட்டுமான பொருட்களை தேர்வு செய்யலாம். தொடக்க விழா நிகழ்ச்சியில், கலெக்டர் பிரதீக் தாயள், மாநகராட்சி கமிஷனர் என். பொன்மணி., கிரடாய் தமிழ்நாடு சங்க தலைவர் ஹபீப், துணை தலைவர் கோபிநாதன், சங்க தேசிய நிர்வாகி ஸ்ரீதரன் ஸ்வாமிநாதன், தேசிய இணை செயலாளர் சுரேஷ் கிருஷ்ணா உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். திருச்சி கிரடாய் கிளையில் 65 கட்டுமான நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ரூ.30 லட்சத்தில் தொடங்கி ரூ. 6 கோடி வரையிலான மதிப்பீட்டில் வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது. திருச்சியில் நடக்கும் பேர்புரோ – 2026 கண்காட்சியில் 32 கட்டுமான நிறுவனங்கள், உள் அலங்கார நிறுவனங்கள், கட்டுமான பொருள்கள் விற்பனை நிறுவனங்கள், எஸ்பிஐ, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், எச்.டி.எப்.சி பேங்க், உள்ளிட்ட பல வங்கிகள், ஸ்டால்கள் அமைக்கவுள்ளன. வங்கிகள் சார்பில் வீடு வாங்குவதற்கான வீட்டு கடன், நிதி ஆலோசனை வழங்கப்படுகிறது. மக்களுக்கு வீடுகள் குறித்த தொழில் நுட்ப விழிப்புணர்வை உருவாக்குதல், சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்த வீட்டில் செய்ய வேண்டிய வழி முறைகள், கட்டிடத்தின் பரப்பளவை கணக்கிடுதல், சட்டப்பூர்வ ஆவணங்களை ஆராய்தல் போன்றவற்றில் கிரடாய் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது. கிரடாய் அமைப்பு சார்பில் கட்டப்படும் வீடுகள் குறித்த காலத்தில் கட்டி முடிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. மானியத்துடன் அரசு அறிவிக்கும் வீடு கட்டும் திட்டங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு முறையாக தெரியப்படுத்துகிறோம். இந்த அரிய வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கண்காட்சியில் வீடு புக்கிங் செய்பவர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது என்றனர்.

Comments are closed.