திருச்சி, தென்னூர் வெள்ளாள தெருவை சேர்ந்தவர் முஹமது பாரூக் (32). ஆட்டோ மெக்கானிக். இவருக்கு அசார்(28) என்கிற சகோதரர் உள்ளார். இவர் மீன் கடையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று(23-09-2026) மாலை பாரூக், அசார் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களின் தாய் நிஷா, வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டில் முஹமது பாரூக் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனைப் பார்த்து அவர் கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தில்லை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அரவிந்த் பனாவத், தில்லை நகர் உதவி ஆணையர் விஜயகுமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அண்ணன், தம்பி இருவருக்கும் மதுப்பழக்கம் இருந்துள்ளது. போதையில் இருவரும் அடிக்கடி சண்டை போடுவார்கள் எனவும், இருவரும் இன்று போதையில் இருந்த நிலையில் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அசார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து பாருக்கின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. பின்னர், முகமது பாரூக்கின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிந்து அசாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.