திருச்சியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்…* மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்…! (வீடியோ இணைப்பு)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி, மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலில் 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு படைக்கப்பட்டது.
இந்து மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளும் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்நாளில் சிறிய அளவிலான விநாயகர் முதல் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வரை வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு மூன்றாம் நாளில் ஆற்றில் கரைக்கப்படும். அந்தவகையில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று(14-09-2026) தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதேபோல திருச்சியிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.வீடுகள் மற்றும் தெருக்களின் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில் உள்ள மாணிக்க விநாயகரை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதற்காக அதிகாலை 4:30 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. பின்னர், மாணிக்க விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 150 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு உச்சிப் பிள்ளையாருக்கு படைக்கப்பட்டது. இதில் திருச்சி மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இதேபோல திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Comments are closed.