திருச்சி விமான நிலையத்தில் ‘கஸ்டம்ஸ்’ அதிகாரிகளுக்கு ஆபாச அர்ச்சனை ! – உள் குத்து என்ன ? (வீடியோ இணைப்பு)
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படும் சம்பவங்கள் அண்மைக் காலமாக தொடர்கதையாகவே மாறிவிட்டன. மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாகப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் தொடர்ந்து கடத்தப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இம்மாதம் செப்டம்பர் 6ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 100 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல செப்டம்பர் 8ம் தேதி ரூ.1 கோடி மதிப்பிலான 648 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உயர்தர போதை பொருட்கள், வெளிநாட்டு பணம் மற்றும் அரிய வகை விலங்குகள், பறவைகளும் கடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு விமான நிலைய அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருப்பதாக சொல்லப்படுகிறது.மேலும், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தை பெற்று அதை கைமாற்றி விடுவதற்காக சிலர் ‘குருவி’யாகவும் செயல்பட்டு வருகின்றனர்.அந்தவகையில் வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கத்தை யாரோ ஒரு அதிகாரி சரியான முறையில் குருவியிடம் சேர்க்காததால் ஆத்திரமடைந்த அந்த ‘குருவி’ விமான நிலைய வளாகத்தில் நின்று கொண்டுஅந்த அதிகாரியை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்கிறார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் ஒரு சில கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கும், அவர்களை நம்பி (?) ஏமாந்ததாக கூறப்படும் தங்கம் கடத்தல் பேர்வழிகளுக்கும் இடையிலான சண்டையா இது?, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் என்ன நடக்கிறது ?விமான நிலைய வளாகத்தில் இவ்வளவு அசிங்க, அசிங்கமாக பேசுபவர் யார்? எதற்காக இவ்வளவு கொச்சையாக பேசுகிறார் ?யாரை திட்டுகிறார் ?அதற்கான உள்குத்து என்ன ?. இதுகுறித்துவிசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Comments are closed.