திருச்சி, கோர்ட் எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானாவில் கடும் வாகன நெரிசல்… * தானியங்கி சிக்னல் அமைத்து தீர்வுகாண கோரிக்கை..!
திருச்சி மாநகரில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதிகளில் ஒன்று கோர்ட் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா. காலை தொடங்கி இரவு வரை எப்போதுமே வாகன நெரிசலால் இப்பகுதி கடும் போக்குவரத்து நெரிலில் சிக்கித்திணறி வருகிறது. பாரதிதாசன் சாலையிலிருந்து அரசு மருத்துவமனை நோக்கி செல்லும் வாகனங்கள், ஹி.ஹெச்சில் இருந்து கோர்ட் நோக்கி வரும் வாகனங்கள், ஐயப்பன் கோவில் மேஜர் சரவணன் சாலையிலிருந்து வரும் பஸ், கார்கள், அதேபோல அண்ணாநகர் ஸ்டூடண்ட்ஸ் ரோட்டிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் என நாலாப்புறத்திலிருந்து வரும் கார்கள், டூ வீலர்கள், பஸ்கள் அனைத்தும் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவை கடந்துதான் செல்ல வேண்டும்.
இப்பகுதியின் வாகன நெரிசலை குறைக்க கடந்த 2016ம் ஆண்டில் ரூ.45 லட்சம் செலவில் 6 ஆயிரம் சதுரடி பரப்பில் எம்.ஜி.ஆர் சிலையை சுற்றி ரவுண்டானா பகுதி விரிவாக்கப்பட்டது. ஆனாலும் நாளுக்கு நாள் ட்ராஃபிக் அதிகரித்துக்
கொண்டேதான் இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.அதிலும் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி, புத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்பவர்களும் நெருப்பாற்றை நீந்துவது போல, வாகனங்களில் இருந்து வரும் தூசு, புகைகளை உள் வாங்கிக்கொண்டு இப்பகுதியை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு வாகன நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தாலும், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள “பீக் ஹவர்”ஸில் நீண்ட நெடிய தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்பகுதியில் ட்ராஃபிக் சிக்னலும் இல்லாததால் கார்கள் மற்றும் டூ வீலர்களில் செல்பவர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்று விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. ஆகவே, திருச்சி மாநகர காவல்துறை, கோர்ட் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைத்து வாகன நெரிலுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.