Rock Fort Times
Online News

3 ஆயிரம் ஆசிரியர்கள் ஒன்று திரண்ட சௌடாம்பிகா கல்விக்குழுமத்தின் ஆசிரியர்களுக்கான “விதை” விருது வழங்கும் விழா… தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் அசத்தல் பேச்சு..!

திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் முன்னணி தனியார் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது சௌடாம்பிகா கல்விக்குழுமம். இந்நிறுவனத்திற்கு திருச்சி, முசிறி, தொட்டியம், துறையூர், ஜெயங்கொண்டம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மொத்தமாக சுமார் 32 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.3000க்கும் அதிகமான ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ம்தேதி ஆசிரியர் தினத்தன்று, சிறப்பான முறையில் பணியாற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக “விதை” விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில் இவ்வருடத்திற்கான விருது வழங்கும் விழா துறையூர் சௌடாம்பிகா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சௌடாம்பிகா கல்விக்குழுமத் தலைவர் எஸ்.ராமமூர்த்தி, செயலாளர் ஆர்.செந்தூர் செல்வன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தன்னம்பிக்கை பேச்சாளர் சி.கோபிநாத் பேசும்போது” இப்போதைய ஜென்ஸீ தலைமுறை மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதை தாண்டி உணர்வு ரீதியான பரிமாற்றங்கள் தேவை. பெற்றோர்களைத்தாண்டி ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களுக்கு அதைத்தர முடியும். செல்போன், டிஜிட்டல் அடிக்ஷன் ஆகியவை மாணவர்களின் படிப்பாற்றலை குறைக்கின்றன. குடும்பங்களின் கட்டமைப்புகள் சிதைந்து தனித்து விடப்பட்டுள்ளனர். இதையெல்லாம் புரிந்துகொண்டு மாணவர்களை சரியாக கையாண்டால் இந்தியாவின் வருங்கால தலைமுறையினரை உருவாக்க முடியும்.

இன்றைக்கு பாடங்களையும், அறிவுகளையும் விரிவாக்க எத்தனையோ டெக்னாலஜிகள் வந்துவிட்டன. ஆனால் அதையும் தாண்டிய அறிவு சார்ந்த விஷயங்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்லித்தரும்போது அவர்கள் பொழுதுபோக்கில் இருந்து வெளிவந்து சிறந்தவர்களாவார்கள் என பேசினார். இந்நிகழ்ச்சியில் சௌடாம்பிகா கல்விக்குழுமத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்