தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதில், காங்கிரஸ் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டன. இந்தக் கட்சிகளை அப்படியே நாடாளுமன்றத் தேர்தலிலும் பயன்படுத்திக் கொள்ள தமிழக வெற்றிக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்தக் கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் அண்மையில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது கூட்டம் வருகிற 9-ம் தேதி நடைபெறவுள்ளது. கூட்டத்தில் பங்கேற்குமாறு நேற்று கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று(05-09-2026) காலை காங்கிரஸ் மற்றும் சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்திற்கு தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் வருகை தந்து விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து அழைப்பு விடுத்தனர். இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன், 9ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும். கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ளன. இந்த கூட்டத்தில் விசிக பங்கேற்கும். பிரதமர் வேட்பாளர் குறித்து செப். 9 -க்குப் பிறகு பேசலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா கூறுகையில், “கூட்டணி சார்பாக ஏற்கெனவே ஒரு கூட்டம் நடந்திருக்கிறது, இது 2-வது கூட்டம். கூட்டணியின் பெயர், எதிர்கால திட்டங்கள், அதற்கான செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். 2029 தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. அதற்கு தான் கூட்டணியை உருவாக்கப் போகிறோம். செப். 9 ம் தேதி மாலை முக்கிய முடிவுகள் தெரிய வரும் என்றார்.

Comments are closed.