தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, மாற்றுத் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. சத்யபாமா, முதன்முறையாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தினார். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நிலையில், அவை நடவடிக்கைகளை திறம்பட நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் மாற்றுப் பேரவைத் தலைவராக (மாற்றுச் சபாநாயகர்) தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த திருப்பூர் வடக்கு தொகுதி பெண் எம்.எல்.ஏ. சத்யபாமா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (செப். 2) முதன்முறையாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வெற்றிகரமாக வழிநடத்தினார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அப்போது, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவையை விட்டு வெளியேறிய நிலையில், மாற்றுப் பேரவைத் தலைவராக தவெக எம்.எல்.ஏ. சத்யபாமா பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தினார். சபாநாயகர் அவையில் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் வழக்கமாக அவையை வழிநடத்துவார். ஆனால், இருவரும் அவையில் இல்லாததால், தவெக எம்.எல்.ஏ. சத்யபாமா மாற்றுப் பேரவைத் தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெண் மாற்றுப் பேரவைத் தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்துவது இதுவே முதல் முறையாகும்.
சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து மிகவும் பொறுமையாகவும், கம்பீரமாகவும் அவையை வழிநடத்திய தவெக பெண் எம்.எல்.ஏ. சத்யபாமாவின் செயல்பாட்டை பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மனதாரப் பாராட்டினர். திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எழுந்து நின்று பேசியதாவது: “லேடி வெலிங்டன் இந்த சட்டப்பேரவைக்கு வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண்மணி பேரவைத் தலைவராக அமர வேண்டும் என்பது நீண்ட காலமாக எல்லோரிடத்திலும் இருக்கும் எதிர்பார்ப்பு. இன்றைக்கு மாற்றுத் தலைவராக நீங்கள் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, உள்ளபடியே பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

Comments are closed.