திருச்சி ஜமால் முகமது கல்லூரி தமிழாய்வுத்துறைபெண்கள் பிரிவு மற்றும் துறையூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய “தமிழிலக்கியங்களில் திருநங்கைகளின் வாழ்வியல்” என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம், ஜமால் முகமது கல்லூரி சையத் ஹுசைனுதீன் அரங்கில் இன்று(02-09-2026) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இர.ஜாஹிர் ஹுசைன் தலைமைத் தாங்கினார். கல்லூரியின் கூடுதல் துணை முதல்வரும், தமிழாய்வுத்துறைத் தலைவருமான எஸ்.நாகூர் கனி வரவேற்புரையாற்றினார். கருத்தரங்க அமைப்புச் செயலரும், தமிழாய்வுத்துறைத் தன்னிதிப் பெண்கள் பிரிவின் பொறுப்பாளருமான மு.ஹ. ஜஹனாரா நோக்கவுரையும், இஸ்லாமியத் தமிழ் பண்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநரும், தமிழாய்வுத்துறையின் ஒருங்கிணைப்பாளருமான அ. சையத் ஜாஹிர் ஹசன் வாழ்த்துரையும் வழங்கினர். அதனைத் தொடர்ந்து கல்லூரியின், செயலர் மற்றும் தாளாளர் டாக்டர். அ.கா. காஜா நஜீமுதீன் சிறப்புரை நிகழ்த்தினார். இக்கருத்தரங்கில் கல்லூரியின் பொருளாளர் எம்.ஜே. ஜமால் முகமது, உதவிச் செயலர் கே. அப்துஸ் சமது, நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் மதிப்புறு இயக்குநர் கா. ந. அப்துல் காதர் நிஹால் மற்றும் விடுதி நிர்வாக இயக்குநர் கா. ந. முகமது பாசில், கூடுதல் துணைமுதல்வர் அ. ஜாபர் அஹமத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மதுரை திருநங்கையர்
மற்றும் திருநம்பிகள் ஆவண மையத்தின் இயக்குநர் பிரியாபாபு பேசியபோது, “திருநங்கைகள் நாள்தோறும் பல்வேறு வலிகளையும், சிக்கல்களையும் சந்திக்கின்றனர். அதனையெல்லாம் களைந்து அவர்களையும் இந்தச் சமூகத்தின் ஒரு அங்கமாக அங்கீகரித்து அவர்கள் உரிமைகள் சார்ந்தும், தொழில்கள் சார்ந்தும் முன்னேற பொதுச்சமூகம் வாய்ப்புகளை நல்க வேண்டும்” என்று கூறினார். அதனைத்தொடர்ந்து திருநங்கை எழுத்தாளர், நாடகக் கலைஞர், சமூக ஆர்வலர் ரேவதி ஆறுமுகம் தலைமையில் “வெள்ளை மொழி” என்னும் பொருண்மையில் ஓரங்க நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. இக்கருத்தரங்கில் 90-க்கும் மேற்பட்ட ஆய்வு க்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்பட்டது. கருத்தரங்கில் துறைத் தலைவர்கள், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியாக கருத்தரங்க அமைப்பு இணைச்செயலர் ச.பார்வதி நன்றி கூறினார்.

Comments are closed.