Rock Fort Times
Online News

ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்.எல்.ஏ.வின் கருத்து அவை குறிப்பிலிருந்து நீக்கம்… * பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், சபாநாயகர்!

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று(31-08-2026) மீண்டும் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், வீட்டு வசதி துறையின் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் சோழவந்தான் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா உரையாற்றினார். அப்போது, இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிக்க தேவையில்லை என்றும், அதற்கு மாறாக மற்ற திட்டங்களுக்கு செலவழிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்திற்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், தவெக எம்.எல்.ஏ.வின் பேச்சை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ கருப்பையா ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய கருத்து, அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக
இன்றைய கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா ஜல்லிக்கட்டு குறித்து பேரவையில் பேசியது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் இருப்பவர்கள் என்னிடம் விளக்கம் கேட்டார்கள். மேலும் தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பிலும் இதுகுறித்து என்னிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பேரவையில் ஜல்லிக்கட்டிற்கு எதிராக கருப்பையா பேசிய குறிப்பிட்ட வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. மேலும், நான் ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து தவறான அர்த்தத்தில் பேசவில்லை என சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா என்னிடம் விளக்கம் அளித்துள்ளார்” என சபாநாயகர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க
சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா முயன்றபோது, அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பேரவையில் பேச அனுமதி கிடையாது என கூறி, அவருக்கு அனுமதி வழங்காமல் இந்த விவாதத்திற்கு சபாநாயகர் முற்றுப்புள்ளி வைத்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்