Rock Fort Times
Online News

“அவ்வளவு பெரிய பேரழிவில் இருந்து நாங்கள் உயிர்தப்பியதே மிகப்பெரிய அதிசயம்”…* நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட திருச்சி பெண் ‘திகில்’ பேட்டி..!

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அங்கிருந்து மீட்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். வெள்ளம் குறித்து அவர்களிடம் கேட்டபோது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் சத்தியா, “நாங்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென புழுதி கிளம்பியது. என்னவென்று பார்த்தபோது சுனாமி அலைபோல 70 முதல் 80 அடி உயரத்துக்கு கல்லும், மண்ணும் கலந்த பெருவெள்ளம் சுழன்று வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தோம். உடனடியாக ஓட்டுநரும், காவல்துறையினரும் எங்களை பேருந்திலிருந்து இறங்கி ஓடுமாறு எச்சரித்தனர். அப்போது சாலை முழுவதும் மண் மற்றும் கற்களால் மூடப்பட்டிருந்ததால் பாதை எதுவும் தெரியவில்லை. ஆனாலும் செங்குத்தான மலையில் புல் செடிகொடிகளை பிடித்துக்கொண்டு மேலே ஏறி உயிர் தப்பினோம். முட்புதர்களுக்கு இடையே சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்று பாதுகாப்பு முகாமை அடைந்தோம். தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களை பத்திரமாக தமிழகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சியைச் சேர்ந்த சிவரஞ்சனி கூறுகையில், “அவ்வளவு பெரிய பேரழிவில் இருந்து நாங்கள் உயிர்தப்பியதே மிகப்பெரிய அதிசயம். திருச்சியிலிருந்து நாங்கள் நண்பர்கள் 17 பேரும், மற்றவர்களும் இணைந்து சுமார் 60 பேர் கொண்ட குழுவாக பயணம் செய்தோம். இதில் 57 பேர் சூப்பர் யாத்ரா மூலம் சென்றோம். நிலச்சரிவு ஏற்பட்டபோது 21 பேர் நடுவிலிருந்த வாகனத்தில் இருந்தோம். அதிர்ஷ்டவசமாக எங்கள் வாகனம் ஒரு வளைவில் நின்றிருந்தது. அப்போது மண்ணும், கற்களும் கலந்த பெரும் அலைபோன்ற நிலச்சரிவு எங்களை நோக்கி வந்தது. ஆனால் அது எதிரே இருந்த பாறையில் மோதி சிதறியதால் நாங்கள் தப்பித்தோம். எங்கள் வாகனத்தின் வலதுபுறக் கதவை திறப்பதற்கு மட்டும் தான் அங்கு இடமிருந்தது. அதன் வழியாக 21 பேரும் ஒவ்வொருவராக வெளியேறி மலையில் ஏறி உயிர் தப்பினோம். நாங்கள் ஆபத்தில் சிக்கிய தகவல் கிடைத்ததும் தமிழ்நாடு அரசும் இந்திய தூதரக அதிகாரிகளும் எங்களை மீட்டனர். மற்ற வாகனங்களில் சென்றவர்களும் பாதுகாப்பாக கிடைக்க வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனை” என்றார்.

அமைச்சர் ஆனந்த்,

மீட்புப்பணிகள் குறித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், “முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்று அங்கு முகாமிட்டுள்ளனர். அங்கிருந்து அனைத்து விவரங்களையும் சேகரித்து உடனுக்குடன் முதலமைச்சருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். நேபாளத்தில் சிக்கியுள்ள மற்ற தமிழர்களையும் மீட்கும் பணிகளையும் தமிழ்நாடு அமைச்சர்கள் குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்