நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக பிரசித்திப் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டுச் செல்லும் ஆன்மிகத் தலமாகவும் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு திருவிழா
இன்று(29-08-2026) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். திருவிழாவுக்கு வருகைத் தரும் பக்தர்கள் நலன் கருதி வேளாங்கண்ணி கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் தடுப்புகள் அமைத்து எச்சரிக்கை பதாகை வைத்து, அறிவிப்பும் செய்யப்பட்டு வருகிறது. திருவிழாவை சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதுடன் பக்தர்களுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாத வகையில் காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் வேளாங்கண்ணிக்கு இயக்கப்படுகின்றன.
தமிழக நிதியமைச்சர் பாதயாத்திரை:
தமிழக நிதி அமைச்சர் என். மரிய வில்சன் வேளாங்கண்ணிக்கு நடைபயணமாக செல்லும் விதத்தில், காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை வந்தார். அவரை பாத யாத்திரை குழுவினரும், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மக்களும் வரவேற்றனர். பின்னர், அவர் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாகப் புறப்பட்டார்.

Comments are closed.