Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு உட்பட 5 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்க வேண்டும்…* முதல்வர் விஜய் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு..!

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங் கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டது. தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என பதில்மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில், முதல்வர் விஜய் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17-ம் தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மே 10-ம் தேதியே தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், ராஜினாமாவை, சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியான தொகுதிக்கு தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனவும், இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரி வழக்கு தாக்கல் செய்தவர், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவரல்ல; தொகுதி வாக்காளருமல்ல எனவும் விஜய் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்ற உள்நோக்கத்தில், அடிப்படை உரிமையில்லாமல் , இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தொகுதியின் லட்சக்கணக்கான மக்கள், எம்எல்ஏ இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுநலனுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 5 தொகுதிகளின்
திருச்சி கிழக்கு தொகுதியில் 20 பேர் போட்டியிட்ட நிலையில், தேர்தல் வழக்கை தாக்கல் செய்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது எனவும், காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம், இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும் எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்