விலைவாசி உயர்வு: ரேஷன் மற்றும் பசுமை கடைகள் மூலம் பொருட்கள் விற்பனை…* உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன்..!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (28-08 2026) கூடியதும் விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவரை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
அரிசி கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. இதேபோல சர்க்கரை, மஞ்சள், மிளகாய், வெல்லம், புளி, பருப்பு விலைகளும் அதிகரித்துள்ளது. எண்ணெய் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமக்கு வறட்சி நிலவுகிறது. இதனால் ஆந்திராவில் இருந்து வரும் அரிசி வரத்தும் குறைந்துள்ளது. அதிமுக அரசு இருந்தபோது விலை ஏற்றத்தின்போது எந்த பொருள் விலை ஏறுகிறதோ, அந்த பொருள் எந்த மாநிலத்தில் எங்கு குறைவாக உள்ளதோ அங்கிருந்து இறக்குமதி செய்து கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்து விற்கப்பட்டது. அதனால் விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். எனவே இந்த அரசும் விலைவாசியை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு விளக்கம் அளித்த உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன், “ஈரான் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சர்க்கரை நமது மாநிலத்தில் மட்டுமல்ல, அதிக உற்பத்தி செய்யும் மகாராஷ்டிராவிலும் ஏறியுள்ளது. எல்லா இடங்களிலும் விலை ஏறத்தான் செய்திருக்கிறது. நமது முதலமைச்சர் தலைமையிலான கமிட்டியில் வாராவாரம் 41 பொருட்களுக்கு உண்டான விலையை தினமும் கண்காணிக்கிறோம். விலை உயர்வு உள்ளவற்றை கண்டறிந்து கடந்த காலங்களில் என்ன நடைமுறைப்படுத்தினோமோ அதை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு பாதிப்பில்லாத வண்ணம் விலையை குறைக்க முயன்று வருகிறோம். ரேஷன் கடைகள் மூலமாக மட்டுமல்ல, அங்கன்வாடி, பசுமை கடைகள் மூலமாகவும் சென்ற ஆட்சிக்காலங்களை வழங்கியது போல இப்போதும் கண்டிப்பாக வழங்கப்படும் என தெரிவித்தார்.

Comments are closed.