தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், துறைகள் ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (28-08-2026) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இன்று அவை கூடியதும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது.,
“அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்த பொருட்களை எடுத்தாலும் கடந்த 3 மாதங்களில் விலை பல மடங்கு உயர்ந்திருக்கின்றது. குறிப்பாக இந்த அரசு அமைந்ததில் இருந்து அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கின்றது. மே மாதம் 1 கிலோ அரிசி ரூ.55க்கு விற்பனையான நிலையில் இன்றைக்கு ரூ.75க்கு விற்பனையாகிறது. மே மாதம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.40, இன்றைக்கு கிலோ ரூ.80… மே மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150, இன்றைக்கு கிலோ ரூ.180 வரைக்கு உயர்ந்திருக்கிறது. இந்த விலை ஏற்றத்தை பார்த்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் இதை கண்டித்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 2007ம் ஆண்டு தேசிய அளவில் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டது. அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கடை மூலம் பருப்பு, எண்ணெய், ரவா, மைதா உள்ளிட்ட பொருட்களை சந்தை விலையை விட குறைவான விலையில் மக்களுக்கு வழங்கினார். கலைஞர் அறிவித்த சிறப்பு பொது விநியோகத் திட்டம் தற்போது வரை நடைபெற்று வருகிறது. ரேஷன் கடை மூலமாக அத்தியாவசிய பொருட்களை தற்போது வழங்கும் அளவைவிட இன்னும் கூடுதலாக வழங்க அரசு ஆலோசனை செய்ய வேண்டும். குறிப்பாக முதல்வர் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்ற வகையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு இந்த அரசு உடனடியாக நல்ல தீர்வு காண வேண்டும்” என்று கூறினார்.

Comments are closed.