Rock Fort Times
Online News

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும்: முதல் அமைச்சர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (20.08.2026) நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா, கேரளம் முதல்-மந்திரி சதீசன். புதுச்சேரி மாநில கவர்னர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய தமிழக முதல்வர் விஜய், தென்மாநிலங்களுக்கு நிதி செலவீன சுயாட்சி அதிகாரம் தேவை என்ற கருத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். மேலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 125 அடியாக உயர்த்த வேண்டும். தொகுதி மறுவரையறையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு பிளஸ் -2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குப்படுத்த வேண்டும். போதைப் பொருட்களை தடுக்க மாநிலங்களுக்கு இடையே கூட்டமைப்பு தேவை என்பதையும் வலியுறுத்தினார். மேலும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும். பெங்களூரு மெட்ரோவை ஒசூரிலிருந்து நீட்டிக்க வேண்டும். இதனால், தமிழகம் கர்நாடகம் என இரு மாநில மக்களுக்கும் பயன் ஏற்படும் என்றும் முதல்வர் விஜய் வலியுறுத்திப் பேசியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்