Rock Fort Times
Online News

போதைப் பொருள் கடத்தலை தடுப்பதில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீஸ் அதிகாரிகளுக்கு ‘முதல்வரின் காவல் பதக்கம்’…* முதல்வர் விஜய் வழங்கினார்!

தமிழகத்தில் ‘போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்’ 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. அதன்படி, 2026- ம் ஆண்டிற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் விவேகானந்த சுக்லா (கடலூர்), ஜி.சந்தீஷ் (ராமநாதபுரம்), சென்னை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் லட்சுமணன், சென்னை பெருநகரக் காவல் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் வை.மனோஜ்குமார், திருச்சி மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் மோ.கண்ணன், கோவை மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் பொ.காமராஜ், தேனி மாவட்டம் குரங்கணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மு.அருண், தலைமைக் காவலர்கள் கே.ராஜ்குமார் (குமுளி), க.கார்த்திகேயன் (நாகப்பட்டினம், வேட்டைக்காரனிருப்பு), அ.குத்புதீன் (புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினம்), திருப்பூர் மாநகரம் நல்லூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் க.ராமர், கரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் உ.பி.செந்தில் குமார், தலைமைக் காவலர்கள் மு.அய்யப்பன் (திருநெல்வேலி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), ந.பிரேம்குமார் (சென்னை பெருநகரக் காவல் அசோக் நகர்), ச.ராமகிருஷ்ணன் (தேனி போதை பொருள் நுண்ணறிவுப் பிரிவு) ஆகியோர் 2026ம் ஆண்டுக்கான பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான விழா சென்னை மாநில கல்லூரியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று(11-08-2026) நடைபெற்றது. முன்னதாக போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலமைச்சர் விஜய், காவல் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். போதைப்பொருள், புகையிலை இல்லாத வளாகம் எனும் பிரசாரத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். கல்வி நிறுவனங்களில் Anti Drug Clubs அமைத்து விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பிரசாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போதைப்பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது, எனது நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க உதவுவேன் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதையடுத்து போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் விருது மற்றும் பதக்கங்களை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்