புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே தன்னங்குடியை சேர்ந்தவர் நாகராஜ்(39). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவர், இன்று(10-08-2026) காலை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மனைவியை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும் பாக்குடி வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பாக்குடி பெரிய குடும்பம்பட்டி சாலையில் இவரை வழிமறித்த மர்ம கும்பல், அவரது தலையை துண்டித்து படுகொலை செய்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவயனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வருபவருக்கும் இடையே ஏற்கனவே இட பிரச்சினை தொடர்பாக வழக்கு இருப்பதாகவும், இதுதொடர்பாக முன் விரோதம் இருந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கு இடப் பிரச்சனை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இலுப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.