நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர்( கரூர்), டாக்டர் சி.விஜயபாஸ்கர்,( விராலிமலை), ஜெயக்குமார்( பெருந்துறை), இசக்கி சுப்பையா(அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் வரை அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதித்ததோடு, இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.-க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் விசாரணைக்கு யாரும் வராததால், மனுதாரர் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதையடுத்து, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நீட்டித்த நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்தனர்.

Comments are closed.