முந்தைய திமுக ஆட்சியில் டாஸ்மாக் மதுபான கொள்முதல் உட்பட பல வழிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் உட்பட 7 பேர் மீது கடந்த ஜூலை 28-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில்
முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் நேற்று( ஜூலை 30) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் செந்தில் பாலாஜியைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பது அவசியம். எனவே, முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் இன்று (ஜூலை 31) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
“டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது. புலன் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தருவதை நாங்கள் உறுதி செய்கிறோம். தேவைப்பட்டால் எங்களை அணுகலாம். செந்தில்பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. வழிகாட்டுதல், அறிவுறுத்தல்களை மீறினால் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீனை ரத்து செய்ய நேரிடும். இடைக்காலத்தில் ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தை அணுகலாம்” என நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.