தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் 5,380 மதுக் கடைகள், 3,240 மதுக் கூடங்கள் இயங்குகின்றன. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளின் விற்பனை உயர்ந்தாலும் வருவாய் குறைந்தது. பல்வேறு முறைகேடுகள் காரணமாக இந்த வருவாய் குறைந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நேற்று (ஜூலை 29) சென்னை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜி வீடு, அவரது நண்பர்கள் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தமிழக ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை, வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் இயக்குநராக இருந்த எஸ்.விசாகன் ஐஏஎஸ், டாஸ்மாக் நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளர்கள் டி.ராமதுரை முருகன், ஆர்.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் ரதேஷ் ராஜ் சண்முகவேல், திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளரும், கரூரைச் சேர்ந்தவருமான மூலனூர் எஸ்.கார்த்திக் ஆகிய 7 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வில் இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Comments are closed.