தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்குச் சொந்தமான கட்டிட வளாகம் சென்னை அடையாறில் உள்ளது. இந்த கட்டிடத்தில் எஸ்பிஐ வங்கியின் என்.ஆர்.ஐ (NRI) கிளை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த வங்கியின் லிப்ட் பழுதாகிச் செயல்படாமல் போயுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக வங்கியின் கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங், கயல்விழியின் உதவியாளரைத் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் அவர் அழைப்பை ஏற்காததால், நேரடியாகக் கயல்விழியைத் தொடர்புகொண்டு லிப்ட் பழுது குறித்து மேலாளர் புகாரளித்துள்ளார். அதன்பேரில் வங்கிக்கு நேரில் வந்த கயல்விழி, தனக்கு நேரடியாக போன் செய்தது குறித்து மேலாளர் ஹர்ஷீன் சிங்கிடம் கேள்வி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கயல்விழி, வங்கி மேலாளரின் கன்னத்தில் ‘பளார்’ என ஓங்கி அறைந்துள்ளார். உடன் வந்தவர் கயல்விழியை எழுந்து சமாதானப்படுத்தினார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது.
ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக, வங்கி மேலாளரைத் தாக்கிய கயல்விழி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்பிஐ ஆர்.பி.ஓ முதன்மை மேலாளர் நமச்சிவாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாக மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.