திமுகவில் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநில துணைச் செயலாளராக மீனா ஜெயக்குமார் பணியாற்றி வந்தார். அவர் இன்று(ஜூலை 16) திமுகவிலிருந்து விலகினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், தலைமைக் கழகம் வழங்கிய ஒவ்வொரு பொறுப்பையும் முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியவள் நான். தொகுதி பார்வையாளராக பல்வேறு மாவட்டங்களிலும், கிராமங்களிலும் தங்கி கட்சிக்காக உழைத்துள்ளேன். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் இரவு, பகல் பாராமல் தினமும் சுமார் 200 கி.மீ. பயணம் செய்து தேர்தல் பணியாற்றினேன். என் உழைப்பிற்குப் பின்னால் இருந்தது பதவி ஆசையோ, லாப நோக்கமோ அல்ல; இயக்கத்தின் மீது கொண்ட நம்பிக்கையும் பற்றுமே. தேர்தல் முடிந்த பிறகு, எனது நண்பர் லீமாவும் நானும் பல ஆண்டுகளாக ரோட்டரி மற்றும் அறக்கட்டளை வாயிலாக செய்து வரும் சமூகநலப் பணிகள் தொடர்பாக சந்தித்தோம். அந்த இயல்பான சந்திப்பையே சிலர் அரசியலாக்கி, சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற, தரக்குறைவான மற்றும் ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பினர்.
கருத்து வேறுபாடு இருக்கலாம். அரசியல் விமர்சனம் இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் கண்ணியத்தை கொச்சைப்படுத்தி அரசியல் செய்வது மனிதநேயமும் அல்ல, திராவிட இயக்கம் பேசிய சமூக நீதியும் அல்ல. அதனால் மனவேதனையுடன் தி.மு.க.வில் இருந்து விலகுகிறேன். ஒரு பெண்ணின் கண்ணியத்தை அரசியல் ஆயுதமாக மாற்றுபவர்கள், முதலில் தாங்களும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், என் மீது ஆதாரமற்ற அவதூறுகளையும் பொய்யான குற்றச்சாட்டுகளையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். திமுகவின் தோல்விக்கும், திமுகவிலிருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விலகுவதற்கும் காரணம் வெளியில் இல்லை, கட்சிக்குள்ளேயே இருக்கும் சில கீழ்த்தரமான நபர்கள்தான் காரணம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.