திருச்சியில் போலீசார் அதிரடி ‘ரெய்டு’; வீட்டில் பதுக்கிய 17 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்… பட்டாக் கத்திகளுடன் 2 பேர் கைது..!
திருச்சியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் போதை ஊசி பயன்படுத்திக் கொண்ட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் 2 தனிப்படைகளை அமைத்தார். அவர்கள் எந்தெந்த இடங்களில் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்படுகிறது என்று ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் திருச்சி, பெரிய கடைவீதி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமான போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த வீட்டில் இரண்டு வாலிபர்கள் இருந்ததோடு அட்டை, அட்டையாக 17 ஆயிரம் போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் ஐந்து பட்டாகத்திகளும், 4 செல்போன்களும் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கார்த்திக் மற்றும் கணேசன் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.