Rock Fort Times
Online News

திருச்சியில் பரபரப்பு: மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை கொலை செய்த கணவன்…!

திருச்சி, தீரன் நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் மிளகுபாறை பகுதியில் பீடா கடை நடத்தி வருகிறார். இவருக்கு கவிதா என்கிற மனைவியும், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மகளும், ஏழாம் வகுப்பு பயிலும் மகனும் உள்ளனர். கவிதா, வீட்டில் உணவு சமைத்து சம்பத்குமாருக்கு மதியம் கொண்டு செல்வது வழக்கம். நேற்று அவர் சாப்பாடு கொண்டு செல்ல தாமதமாகி உள்ளது. இதனால், சம்பத்குமார் வீட்டிற்கு சென்று ஏன் சாப்பாடு கொண்டு வரவில்லை என கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் தேங்காய் உரிக்கும் கம்பியால் கவிதாவை சம்பத் குமார் தாக்கியுள்ளார். இதில் கவிதா பலத்த காயமடைந்தார். இது குறித்து கவிதாவின் பெற்றோருக்கு சம்பத்தே போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து கவிதாவை திருச்சி சீனிவாசா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சையில் இருந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்ற சம்பத்குமார், கவிதாவை கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிந்து சம்பத் குமாரை தேடி வருகின்றனர். மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்