விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன்: மீண்டும் அழைத்தால் வருவேன்… முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி..!
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கரூரில் சாலை அமைக்காமலேயே அமைத்ததாக கணக்குக் காட்டி ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக எ.வ.வேலு மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 25ஆம் தேதி எ.வ.வேலுவின் வீடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த வழக்கின் தொடர்ச்சியாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று (15.07.2026) காலை 11 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். விசாரணை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, “லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகத் தயாராக இருக்கிறேன். எனக்குத் தெரிந்த உண்மைகளை தெரிவித்துள்ளேன். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எந்தக் குற்றமும் செய்யாதவன் நான். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் த.வெ.க. அரசு திட்டமிட்டு என் மீது இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

Comments are closed.