Rock Fort Times
Online News

திருச்சியில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள் இருவர் பலி… மற்றொருவர் கவலைக்கிடம்..!

திருச்சி, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த வினோத், ரமேஷ் மற்றும் சரவணன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் மூவரும் இரவு நேர உணவகங்களில் புரோட்டா மாஸ்டர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் மூவரும் கருமண்டபம் பகுதியில் இயங்கி வரும் மனமகிழ் மன்ற மதுபானக் கூடத்தில் மது அருந்திவிட்டு, ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், சாலையைக் கடக்க முயன்ற இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூவரும் ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இந்த கோர விபத்தில் வினோத் மற்றும் ரமேஷ் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சரவணன் ஆபத்தான நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மது போதையில் இருந்ததும், அவர்கள் இரவு நேர உணவகங்களில் புரோட்டா மாஸ்டர்களாக பணியாற்றி வந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

கருமண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்த மதுபானக் கூடத்தால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இரண்டு உயிர்களைப் பறித்த இந்த கோர விபத்துக்குப் பிறகாவது, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும் அந்த மதுபான கூடத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்