இனி மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை… அரசு மருத்துவமனை செல்ல வீட்டிலிருந்தே ஓ.பி. சீட்டு பெறலாம்…!
ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பியே இருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் நவீன கருவிகளுடன் உயர்ரக சிகிச்சை கிடைப்பதால் நடுத்தர வர்க்கத்தினரும் அரசு மருத்துவமனைகளை நாடுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஓ.பி. சீட்டு பெற காலையிலேயே மருத்துவமனைக்கு சென்று கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. சிலர் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழலும் நிலவுகிறது. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஓ.பி.சீட்டு பெற எளிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நலம் AI என்ற பிரத்யேக வாட்ஸ்அப் சேட்-பாட் சேவையை மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஜூலை 8) தொடங்கி வைத்தார். இதன்மூலம் பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே அரசு மருத்துவமனை புறநோயாளிகள் (OP) பிரிவுக்கு எளிதாக முன்பதிவு செய்யலாம். இதற்கு உங்களது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து 96192 22999 என்ற எண்ணை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். வாட்ஸ்அப்பில் இந்த எண்ணை ஓபன் செய்து “HI” என டைப் செய்து அனுப்ப வேண்டும். அப்போது திரையில் தோன்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி நீங்கள் செல்ல வேண்டிய மருத்துவமனை மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.இந்த சேட்-பாட் மருத்துவ சேவை சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.