Rock Fort Times
Online News

சினிமா திருட்டு விவகாரம்: டெலிகிராம் செயலிக்கு மீண்டும் ‘செக்’ வைத்த மத்திய அரசு…!

இந்தியாவில் வாட்ஸ் அப்புக்கு அடுத்ததாக பிரபலமாக இருக்கும் ஒரு தகவல் பரிமாற்ற செயலி டெலிகிராம். கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் அடுத்தடுத்து சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. அண்மையில் நீட் நுழைவு தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் டெலிகிராம் வழியாகவே வினாத்தாள் பரவுவதாக கூறி மறு தேர்வு முடியும் வரை அரசு டெலிகிராம் செயலிக்கு தடை விதித்திருந்தது. இந்த சூழலில் தான் டெலிகிராம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் சினிமா மற்றும் ஓடிடி (OTT) தளங்களில் வெளியாகும் படங்கள், சீரிஸ்களை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்து வரும் டெலிகிராம் சேனல்களை முடக்க வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டெலிகிராம் நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சினிமா திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஓடிடி தளங்களின் உரிமையாளர்கள், தங்களின் படைப்புகள் டெலிகிராம் தளத்தில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக பகிரப்படுவதாகத் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். சினிமா படைப்பாளிகளின் பொருளாதார நலனைப் பாதுகாக்கவும், காப்புரிமைச் சட்டங்களை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு டெலிகிராம் செயலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டதாக தெரிகிறது. இந்த சூழலில் தான் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக டெலிகிராமிற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அனுப்பி உள்ள நோட்டீஸில், டெலிகிராம் தளத்தில் பரவி வரும் திருட்டுத் திரைப்படங்கள் மற்றும் ஒடிடி உள்ளடக்கங்களுக்கு எதிராக உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அடுத்த 15 நாட்களுக்குள் இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்