Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்…* போக்குவரத்து பாதிப்பு..!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.பெரியப்பட்டி பிரிவு சாலை அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் மையப்பகுதியில் பாதை உள்ளது. இந்தப் பாதையை கடந்து தான் கே.பெரியப்பட்டி, சொக்கம்பட்டி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வந்தனர். மேலும், சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் பணியாளர்களும் இந்த வழியையே பயன்படுத்தி வந்தனர். இந்த இடத்தில் தொடர்ந்து விபத்து நடைபெறுவதாக கூறி பாதை அடைக்கப்பட்டு விட்டது.

மேம்பாலம் அமைக்கும் வரை அந்தப் பாதையை திறந்து விட வேண்டும், மேம்பாலம் அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மறியல் போராட்டம் தொடர்ந்து வருவதால் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கி சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தமிழமணி, மணப்பாறை வட்டாட்சியர் சுந்தர பாண்டியன் மற்றும் போலீசார்  அதிகாரிகள் நடவடிக்கையை தொடங்கியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்வோர் செல்ல முடியாமல் கடும் வேதனைக்கு ஆளாகினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்