தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் கோவளத்தில் இன்று (ஜூலை 1) நடைபெற்றது. த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிப்பதற்காகவும் இக்கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தோழமைக் கட்சித் தலைவர்களை த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அவர்களின் அழைப்பின்பேரில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

த.வெ.க. தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் நிலை, தோழமைக் கட்சிகள் என்ற நிலை, கூட்டணி அமைக்கும் நிலை ஆகிய மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஜனநாயகத்தில் கலந்து ஆலோசிப்பது அவசியம். ஆலோசனைக் கூட்டம் நேர்மறையாக இருந்தது. அனைவரின் கருத்துகளும் பரிமாறப்பட்டன. விரைவில் அடுத்த கூட்டம் நடைபெறும். த.வெ.கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரட்டும்; அதன் பிறகு இந்தியா கூட்டணி குறித்து பேசலாம். மதச்சார்பற்ற ஆட்சியை வழங்குவோம் என முதலமைச்சர் விஜய் உறுதி அளித்துள்ளார். தற்போது எம்.பி.க்கள் உள்ள கட்சிகள்தான் இந்தியா கூட்டணியில் உள்ளன. த.வெ.கவிற்கு எம்.பி.க்கள் வந்தவுடன் இந்தியா கூட்டணி குறித்து பேசுவோம். இந்தக் கூட்டணிக்காக ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும். பொதுவான குறிக்கோள் ஒன்றை உருவாக்க வேண்டும். மேலும், கூட்டணிக்கு ஒரு பெயர் வைக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்கள் குறித்தும் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.

Comments are closed.