திருச்சி, வையம்பட்டியில் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி… பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்…!
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு ‘ஆதிசிவன்’ என்கிற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் பிரபு இந்த நிறுவனம் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, துறையூர், முசிறி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிளைகளை தொடங்கி நடத்தி வந்தது. இதில் 1 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையிலான சீட்டுத் திட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தத் திட்டங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில், சீட்டு முதிர்வு காலம் முடிவடைந்த பின்னரும், முதலீடு செய்தவர்களுக்கு அதற்கான தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியர்களிடம் கேட்டபோது முறையான பதில் எதுவும் அளிக்கப்படவில்லை. இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிட் பண்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக ஏற்கனவே பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில், இன்று (ஜூன் 29) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் திரளாக வருகை தந்து அதிகாரிகளை சந்தித்து மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என மனு அளித்தனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

Comments are closed.