Rock Fort Times
Online News

தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதால் இழிவாக விமர்சித்து வருகிறார்கள்…* திருமாவளவன் வேதனை…!

திமுக கூட்டணியில் இருந்தபோது நம்மை கொச்சைப்படுத்தியவர்கள், இன்று தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள போதும் நம்மை தொடர்ந்து விமர்சித்து வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது இணையதள பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் பேசிய அவர், “திமுக, மதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் அமைச்சர்கள் ஆவதற்கும், விசிக கட்சியை சேர்ந்தவர் அமைச்சர் ஆவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எந்தப் பின்புலமும் இல்லாமல் வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்த அரசியல் களத்தில், அவமானங்களையும் அவதூறுகளையும் சகித்துக் கொண்டு எதிர்நீச்சல் அடித்து இந்த இடத்தை நாம் எட்டிப் பிடித்துள்ளோம். வேறு இயக்கங்களை, சமூகங்களை சார்ந்தவர்களாக இருந்திருந்தால் இதனை ஆகப்பெரிய சாதனையாக கொண்டாடியிருப்பார்கள். இவ்வாறு சாதனைப் படைத்த நிலையில்கூட புறக்கணிக்கப்படுகிறோம், கடுமையாக விமர்சிக்கப்படுகிறோம் என்ற நிலையில் தான் இருக்கிறோம். இந்த புரிதலோடு நாம் பயணத்தை வீரியமாக எடுத்துச் செல்லக்கூடிய தேவை உள்ளது. இன்று இரண்டு சட்டமன்ற, இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியாகவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொண்ட ஒரு இயக்கமாகவும் தகுதிகளை பெற்றுள்ளோம். அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பையும் நாம் பெற்றுள்ளோம். இன்னும் பன்மடங்கு விரியத்தோடு நாம் களமாட தேவை உள்ளது. அதனால்தான் திமுக கூட்டணியில் இருந்தபோது நம்மை கொச்சைப்படுத்தியவர்கள் இன்றைக்கு தவெக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில் மிகக் கடுமையாகவும், இழிவாகவும் விமர்சித்து வருகிறார்கள். நாம் இன்னும் குறி வைக்கப்படுகிறோம் என்பது தான் இதன் பொருள். நம்மை பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் நமது பகைவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். இவைகளைக் கருத்தில் கொண்டு நாம் நம் காரியங்களை நடத்த வேண்டும். நம்மை எவராலும் அப்புறப்படுத்த முடியாது. இன்று தலைகீழாக மாறி உள்ள தமிழக அரசியல் களத்தில் நாம் மீண்டும் மீண்டும் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகவே களமாடி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்