திருச்சி அருகே திமுக கொடி கட்டப்பட்ட காரில் பட்டாக்கத்திகள், உருட்டு கட்டைகள்:* கண்டுகொள்ளாமல் விட்ட வையம்பட்டி போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..? (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த பொன்னம்பலம் பட்டியில் டோல்பிளாசா உள்ளது. கடந்த, 23ம் தேதி அதிகாலை, வக்கீல் ஸ்டிக்கருடன் டோல்பிளாசாவுக்கு தி.மு.க. கொடி கட்டிய கார் ஒன்று வந்துள்ளது. அதில் வந்தவர்கள், அரசு வக்கீல் கார் எனக்கூறி கட்டணம் இல்லாமல் வழிவிட கேட்டுள்ளனர். அதற்கு டோல்பிளாசா ஊழியர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காரில் வந்தவர்கள் டோல்பிளாசா ஊழியர்களை, உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில், டோல் பிளாசா ஊழியர்கள் ரத்த காயம் அடைந்தனர். பட்டாக் கத்திகள் இதுகுறித்து வையம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த காரை சோதனையிட்ட போது, அதில் இரு பட்டாக்கத்திகள், உருட்டு கட்டைகள் இருந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், காரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அதன்பின் அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் காயமடைந்த டோல்பிளாசா ஊழியர் வேலுமணிக்கு சிகிச்சை செலவை, காரில் வந்தவர்கள் ஏற்பது என்றும், கார் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் இருக்க போலீசாருக்கு ‘கவனிப்பும்’ நடந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து வழக்கு ஏதும் பதியாமல் போலீசார் காரை அனுப்பி வைத்துள்ளனர். பட்டாக் கத்திகள், உருட்டு கட்டைகள் போன்றவற்றை காரில் கொண்டு வந்தவர்களை சரியாக விசாரிக்காமல், டோல்பிளாசா ஊழியர்களை ரத்தம் வருகிற அளவுக்கு தாக்கியவர்களை உரிய வழக்கு பதிவு செய்யாமல், ஊருக்கு அனுப்பி வைத்த போலீசாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடவடிக்கை,
தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். சட்டம், ஒழுங்கை காப்பாற்ற முதல்வருக்கு மட்டும் தான் பொறுப்பு இருக்கிறதா? சட்டம், ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய போலீசாருக்கு அந்த பொறுப்பு துளியும் இல்லாதது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்தவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமலும், உரிய வழக்கு பதிவு செய்யாமலும் போலீசார் விடுவித்தது ஏன் என்று தெரியவில்லை. இதில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed.