துவரங்குறிச்சி அருகே கிராவல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மோதி பெண் உயிரிழப்பு…* குவாரிகளை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 32 ). இவர், தனது ஒன்னரை வயது மகள் கயாஸ்ரீ மற்றும் தனது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த அழகம்மாள் (72) ஆகியோருடன் நாட்டார்பட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சீகம்பட்டி அருகே, மலைக்கரடு பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது எதிரே தனியார் கல்குவாரியில் இருந்து கிராவல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மோதியதில் படுகாயமடைந்த அழகம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகேஸ்வரி மற்றும் குழந்தை கயாஸ்ரீ இருவரும் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் துவரங்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உசிலம்பட்டி, அம்மாபட்டி, செவந்தாம்பட்டி, தெத்தூர், மான்பாஞ்சான்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் நான்கு கல்குவாரிகள் செயல்படுவதாகவும், குவாரியில் இருந்து வரும் லாரிகளால் சாலைகள் பழுதடைந்து வருவதுடன் இன்று நடந்தது போன்று அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும்
அந்தக் குவாரிகளை மூடக்கோரி செவந்தாம்பட்டி என்ற இடத்தில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மருங்காபுரி வட்டாட்சியர் பாலகாமாட்சி மற்றும் துவரங்குறிச்சி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்கள் பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே கல்குவாரிகள் செயல்படுவதாகவும், அதிலிருந்து வரும் தூசி மற்றும் மண் துகள்களால் மூச்சு திணறல் ஏற்படுவதாகவும், பாறைகளுக்கு வெடி வைக்கும் போது வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு சுவர்களில் விரிசல் ஏற்படுவதாகவும் தெரிவித்ததுடன் உடனடியாக கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் சமாதானமடைந்த பொதுமக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் திருச்சி – மதுரை சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments are closed.