Rock Fort Times
Online News

கோடிக்கணக்கில் ‘சீட்டிங்’ செய்த திருச்சி ஆதிசிவன் சிட்பண்ட்ஸ்…* 100க்கும் மேற்பட்டவர்கள் போலீசில் புகார்!

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு ஆதிசிவன் சிட்பண்ட்ஸ் என்கிற நிதி நிறுவனம் செயல்பட்டு  வருகிறது. இந்நிறுவனத்திற்கு திருச்சி, தில்லைநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. ஒரு லட்ச ரூபாய் தொடங்கி, பல கோடிகள் வரை இந்நிறுவனத்தில் சீட்டு குரூப்கள் நடத்தப்பட்டு வந்ததாக தெரிகிறது. 15 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில், கடந்த சில ஆண்டுகளாக சீட்டு சேர்ந்தவர்களுக்கு சரியான முறையில் பணப்பட்டுவாடா செய்யாமலும், பணத்தை திருப்பி கேட்டால் உரிய பதில் அளிக்காமலும் இருந்துள்ளனர். இந்நிலையில்,
கடந்த சில வாரங்களாக இதன் உரிமையாளரான பிரபுவிடம் சீட்டு சேர்ந்தவர்கள் தங்களுக்கு வரவேண்டிய பணத்தை கேட்டபோது, தனது நிறுவனம் மிகவும் நஷ்டமடைந்து விட்டதாகவும்,
தான் எவ்வளவு தான் முயற்சி செய்தும் நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியவில்லை எனவும் உங்களுக்கு பணத்தை தர முடியாததால் நான் நிறுவனத்தை காலி செய்து விட்டு ஊரை விட்டு செல்கிறேன். மீண்டும் எப்போது எனக்கு பணம் வருகிறதோ அப்போது நான் உங்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பி தந்து விடுவேன் என ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பி விட்டு இதன் உரிமையாளர் பிரபு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இந்த தகவலால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட மக்கள், வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பணம் சம்பந்தமான பிரச்சனை என்பதாலும், பணத்தொகையின் மதிப்பு அதிகமாக இருப்பதாலும் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு போலீசார் வலியுறுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் திருச்சி, மன்னார்புரத்திலிருக்கும் பொருளாதார குற்றப்பிரிவிற்கு வந்த இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், தங்களது பணத்தை மீட்டுக் கொடுக்குமாறு புகார் அளித்துள்ளனர். புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட போலீசார், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். நிதி நிறுவனத்தில் மோசடி நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்