Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், பாலக்குறிச்சி புனித ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவத் தலைவர்கள் பதவி ஏற்பு விழா…!

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்தில் அமைந்துள்ள புனித ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளி இப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்றாகும். மான்ஃபோர்ட் சகோதரர்களால் நிர்வகிக்கப்படும் இப்பள்ளி கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கி வருகிறது. கல்வி மட்டுமன்றி, விளையாட்டு மற்றும் தேசிய தடகளப் போட்டிகளிலும் இப்பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இந்தப் பள்ளியில் இன்று (24-06-2026) மாணவத் தலைவர்கள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். வளநாடு காவல் நிலைய ஆய்வாளர் வாணி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், மாணவர்களாகிய நீங்கள் நாளைய இந்திய தேசத்தின் எதிர்கால தூண்கள். எனவே பள்ளியில் பயிலும் காலத்தில் நற்பண்பு, நற்சிந்தனை, நல்லொழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொள்வதுடன் உங்களிடம் பொதிந்துள்ள அனைத்து திறன்களையும் வெளிக்கொணர வேண்டும். தலைமை பண்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும். இளைய தலைமுறையாகிய மாணவர்கள் பேச்சு, கவிதை, கட்டுரை, விளையாட்டு போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டி சமூக ஊடகங்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். அத்துடன் வாசித்தலில் கவனம் செலுத்த வேண்டும் என சிறப்புரையாற்றினார். விழாவில் அருட்சகோதரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் மாணவன் பத்ரிஸ் நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்சகோதரர்கள் பன்னீர்செல்வம், மெசியா பிரபாகரன் ஆகியோருடன் இணைந்து உடற்கல்வி ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை அலுவலர், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்