திமுக ஆட்சியில் கடன் இரு மடங்கு உயர்வு: தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடி…* வெள்ளை அறிக்கையில் ‘பகீர்’ தகவல்கள்!
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றபோது உரையாற்றிய விஜய், தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்று (ஜூன் 16) சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன், நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். குறிப்பாக, பிபிடி எனப்படும் விளக்கக்
காட்சிகளுடன் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டின் கடன் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்தம் கடன் அளவு ரூ.5 லட்சம் கோடியில் இருந்து 13.18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவற்றில் பொதுத் துறை நிறுவனங்களின் கடன் மட்டும் 3,18,176 கோடி ரூபாயாக உள்ளது. அதாவது மாநிலத்தின் ஒவ்வொரு தனிநபர் மீதும் 1.28 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. வருவாய் பற்றாக்குறை கொரோனா ஆண்டை விட அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு பல மாநிலங்கள் தங்களது நிதி நிலையை சீரமைத்து முன்னேற்றப் பாதையில் சென்றுள்ள நிலையில், தமிழ்நாடு மட்டும் நிதி சீரமைப்பில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மாநிலம் தனது முதல் 60 ஆண்டு காலத்தில் திரட்டிய கடனைவிட கடந்த 2021- 2025ம் ஆண்டு வாங்கிய கடன் அதிகம். கடந்த ஐந்து ஆண்டுகளில் கடனுக்கான வட்டி செலுத்தும் அளவு 61% சதவீதம் அதிகரித்துள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி ஆகும். இந்த தொகை இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமானது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட தமிழகம் பின்தங்கியுள்ளது. மாநில சொந்த வரி வருவாய் சரிவு பாதையில் உள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் விகிதம் 2025-26 நிதியாண்டில் 5.45% ஆக உள்ளது. இது இதுவரை இல்லாத மிகக்குறைந்த அளவாகும். மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மொத்த வருவாய் வரவுகளின் பங்கு 2021- 2022 ம் ஆண்டில் ஏறத்தாழ 10% சதவீதமாக இருந்த நிலையில் 2025 2026ம் ஆண்டில் 8.32% குறைந்துள்ளது.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 0.48 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணம், உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற புதிய நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2025-26ம் நிதியாண்டில் இவற்றுக்கான ஆண்டுதோறும் தொடர்ச்சியான செலவினம் சுமார் 25,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், இதற்கு இணையான புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை” என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

Comments are closed.