Rock Fort Times
Online News

விரைவில் இணைய வழி பட்டா மாறுதல் அறிமுகம்? – அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை..!

தமிழகத்தில் நில நிர்வாக மேம்பாடு மற்றும் பொதுமக்கள் எளிதாகப் பட்டா பெற வழிவகை செய்யும் நோக்கில், இணையவழி பட்டா மாறுதல் (Online Patta Transfer) மற்றும் தானியங்கி பட்டா மாறுதல் (Automatic Patta Transfer) திட்டங்கள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது . வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரபு மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ் செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் தங்களின் சொத்து பதிவுக்கு பின் பட்டா மாறுதலுக்காக அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்த்து, விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பட்டா மாற்றங்களை மேற்கொள்வது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவு துறையையும் வருவாய்த்துறையையும் தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக முழுமையாக ஒருங்கிணைத்து, தானியங்கி முறையில் பட்டா மாறுதல் வழங்கும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்திரப்பதிவு நடைபெறும் அதே நேரத்தில், மென்பொருள் மூலமாகத் தரவுகள் பரிமாறப்பட்டு எவ்வித தாமதமுமின்றி தானியங்கி முறையில் பட்டா மாறுதல் செய்யப்படுவதில் உள்ள நடைமுறை சவால்கள் மற்றும் அதனைத் தீர்க்கும் வழிமுறைகள் குறித்து மூன்று துறைகளின் அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் இணைந்து தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்