Rock Fort Times
Online News

சென்னை, பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசுக்குள் ஆண் சடலம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவி கைது…!

சென்னை, பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் உள்ள படிக்கட்டுக்கு அருகே சூட்கேசுக்குள் தலை, கை உள்ளிட்டவை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டது. தலையில்லாத காரணத்தினால் கொலையுண்டவர் யார் என்பதைக் கண்டறிவது காவல்துறைக்கு பெருத்த சவாலாக இருந்தது. ஆகையால், சூட்கேஸில் இருந்த உடலை மீட்ட போலீஸார், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த அந்த நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலி என்பது தெரியவந்துள்ளது. அவரை மனைவி ரஹீமா தனது ஆண் நண்பர் ரசம் அலியுடன் இணைந்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.
ரஹீமா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு தங்கும் அறைகள் ஏற்பாடு செய்து கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ரஹீமாக்கும், அமீர் அலியின் நண்பரான ரசம் அலிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதற்கு அமீர் அலி தடையாக இருந்த நிலையிலேயே அவரை கொடூரமான முறையில் அவர்கள் இருவரும் சேர்ந்து கொலைச் செய்துள்ளனர். மேலும், அவரை யாரும் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக, கொலை செய்த பின்னர் அவரின் தலை மற்றும் கை உள்ளிட்ட பாகங்களை துண்டித்து, வெவ்வேறு இடங்களில் அவர்கள் வீசியதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரஹீமா மற்றும் அவரது ஆண் நண்பர் ரசம் அலி ஆகியோரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்