நம்ம தயவோடு நடைபெறும் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதி எடுப்போம்…* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு…!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கஜேந்திரன் தலைமையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடந்தது. அப்போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “எப்போதுமே ஓர் இயக்கத்தில் இருந்து இன்னொரு இயக்கத்துக்குப் பிரிந்து போகிறார்கள் என்று சொன்னால், ஏதோ ஒரு லாபத்தை அடிப்படையாக வைத்து, ஏதோ வசதியை மனதில் கொண்டு, ஆளுங்கட்சியை நோக்கித்தான் அதிகமாகப் போவது உண்டு. அதைத்தான் நாமும் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு திமுக ஆளுங்கட்சி அல்ல; ஆளுங்கட்சியாக இருந்து, இப்போது எதிர்க்கட்சியாக மாறி இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சியை நோக்கி நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், பதவிக்காக நீங்கள் வரவில்லை, சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக நீங்கள் எல்லாம் வரவில்லை. பணியாற்ற வேண்டும், இந்த இயக்கத்திற்குத் துணை நிற்க வேண்டும், தமிழ் சமுதாயத்திற்கு நாம் பாடுபட வேண்டும், இழந்திருக்கும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு வந்திருக்கிறீர்கள்.
வெற்றி, தோல்வி என்பது நம்மைப் பொறுத்தவரையில் மாறி மாறி வரும். அதற்காக வெற்றியைக் கண்டு வெறி கொண்டு அலைந்து கொண்டிருப்பதும் இல்லை; தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் என்றைக்கும் பணியாற்றக் கூடியவன்தான் திமுககாரன் என்பதை இன்றைக்கு நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஏனென்றால், நாம் வெற்றி பெற வேண்டும், திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும், எதிர்க்கட்சிகள் எல்லாம் தோற்க வேண்டும் என்ற நிலையில் தான் நாம் தேர்தல் களத்தைச் சந்தித்தோம். நம்முடைய கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
நம்முடைய தயவோடு நடைபெறும் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த நிகழ்ச்சியில் உறுதி எடுப்போம்” இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.