திருச்சி காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு: சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல்?- * காரில் இருந்து தள்ளிவிட்ட டிரைவருக்கு பொதுமக்கள் ‘தர்ம அடி’ (வீடியோ இணைப்பு)
சிவகங்கையை சேர்ந்தவர் மாரிசெல்வன் ( வயது 43). கார் டிரைவர். இவர் நேற்று மதியம் சிவகங்கையிலிருந்து திருச்சி காந்தி மார்க்கெட் கல்மந்தை காலனி குடியிருப்பில் வசிக்கும் ஆதிரா (எ) ஆதி தமிழன் என்கிற திருநங்கை மற்றும் அவரது நண்பர்களை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது திருநங்கை ஆதிராவின் 14 வயது மதிக்கத்தக்க தங்கையை மாலை 5 மணி அளவில் கல்மந்தை காலனியிலிருந்து, மாரி செல்வன் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், மாலை 6-30 மணி அளவில் சிறுமியை மாரிசெல்வன் கீரைக்கடை பஜார் பகுதியில் காரில் இருந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது சிறுமி போதை மயக்கத்தில் கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து சிறுமியை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் டிரைவரை தேடி வந்த பொதுமக்கள், இரவு 7-30 மணி அளவில் மீண்டும் கல்மந்தை காலனிக்கு வந்த அவரைப் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில், அவருக்கு தலை மற்றும் உடல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சிறுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சுயநினைவின்றி தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் ஏதேனும் இழைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை மறியல்,
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். தொடர்ந்து சிறுமியை பார்க்க அனுமதிக்க வேண்டும், குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed.