Rock Fort Times
Online News

அதிமுகவிலிருந்து விலகிய காரணம் என்ன? வெல்லமண்டி நடராஜன் விளக்கம்..!

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணையும் நிகழ்ச்சி இன்று(28.05.2026) நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்தனர். இந்த நிகழ்வில் இணைந்த பின் பேசிய வெல்லமண்டி நடராஜன், அதிமுகவில் தனது நீண்ட அரசியல் பயணத்தையும், கட்சியில் ஏற்பட்ட மாற்றங்களையும் விரிவாக விளக்கினார். அவர் கூறுகையில்,

அதிமுகவில் 1972 முதல் பணியாற்றி வந்ததாகவும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தற்போதைய நிலைமைகள் தன்னை அதிருப்தியடையச் செய்ததாக கூறினார்.  மேலும், பழனிசாமி தலைமையின் கீழ் ஏற்பட்ட மாற்றங்கள் பிடிக்காத காரணத்தால், பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டதாகவும், பின்னர் அரசியல் சூழ்நிலையால் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியதாகவும் விளக்கினார். அதிமுகவில் தற்போது நீக்கம் மற்றும் விடுவிப்பு நடவடிக்கைகள் அதிகரித்து, தொண்டர்களிடையே குழப்பம் நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். “அதிமுக தோல்வியடைந்த போதெல்லாம் பொறுப்பை ஏற்ற தலைவர் ஜெயலலிதா போல இப்போது எந்த தலைவரும் பொறுப்பேற்கவில்லை” எனவும் கூறினார். மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புவதாகவும், இளைஞர்கள் புதிய தலைமையைக் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தவெக குறித்து பேசிய அவர், அனைத்து தரப்பினரையும் இணைத்து செல்லும் இயக்கமாக அது இருப்பதாகவும், சாதி, மத, இன வேறுபாடுகள் இல்லாத பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். மேலும், தமிழக அரசியலில் புதிய மாற்றம் உருவாகி வருவதாகவும், மக்கள் மாற்று தலைமையைத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த இணைவு நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்