தமிழக அமைச்சரவையில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரமேஷ், பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. நீங்கள் பிராமணர் என்ற ஒரே காரணத்துக்காக உங்களுக்கு இந்த துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிற தே என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “நம்முடைய தவெக அரசின் கொள்கையாக மதச்சார்பற்ற சமூக நீதி உள்ளது. தந்தை பெரியாரின் இந்த கொள்கையை ஏற்றுக்கொண்டு சமூகத்தில் இருக்கக்கூடிய சாதிய வேற்றுமைகளை களைய வேண்டும், அவை இருக்கக்கூடாது என தன்னுடைய இறுதிக்காலம் வரைக்கும் போராடியவரின் கொள்கையை ஏற்று தவெகவில் இணைந்து பணியாற்றியவர்கள் நாங்கள். அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவில் மாபெரும் சட்டபுரட்சியை ஏற்படுத்திய அம்பேத்கரின் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டவர்கள். எங்களுக்கு மதமோ, சாதியோ, இனமோ, பணமோ, மொழியோ, பாலினமோ எந்தவித பாகுபாடும் கிடையாது என்பதை உறுதியாக ஏற்றுக்கொண்டு தான் தவெகவில் சேர்ந்திருக்கிறோம். அதனால் எதைப் பார்த்தும் தலைவர் விஜய் வாய்ப்பு கொடுக்கவில்லை. சேவை செய்யக்கூடிய மனநிலை இருக்கிறதா என்பதை பார்த்து தான் வாய்ப்பு வழங்கினார். சாதியை வைத்து பேச வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய எண்ணம் இருப்பதை மட்டும் பாருங்கள். ரமேஷ் என்ற தனிப்பட்ட மனிதருக்காக மக்கள் வாக்களிக்கவில்லை. அனைவரும் எங்கள் தலைவர் முதலமைச்சர் விஜய்க்காக தான் வாக்களித்தார்கள். திரையில் அவர் வரும்போது யாரும் சாதி, மதம் அடிப்படையில் பார்க்கவில்லை. அவர்களை தங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்த்தார்கள். விஜய் நிறுத்திய வேட்பாளர்களையும், அமைச்சர்களையும் அப்படித்தான் மக்கள் பார்க்கிறார்கள். அவருக்கு இதுபோன்று பிரிவினை பார்க்கக்கூடிய எண்ணம் துளியும் கிடையாது” என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

Comments are closed.