திருச்சி மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 71 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது. முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்ற நாள் முதல் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில் திருச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டமாக திருச்சி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில், 364 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்
அணிவகுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில், எஸ்.பி.செல்வ நாகரத்தினம் பங்கேற்று இனி யாரும் குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது அதனையும் மீறி ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததுடன், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் மீது குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் கடும் காவல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 71 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 10 பேருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். பிணையில் வர முடியாத வகையில் 9 பிடி வாரண்டுகளும் நிறைவேற்றப்பட்டன. இதுபோல மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களை தடுக்க எஸ்பி செல்வ நாகரத்தினம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அவரது இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

Comments are closed.