தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “ஆளுங்கட்சி 4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி தான் பெற்றுள்ளது. மீதமுள்ள 3.21 கோடி பேர் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 65% மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. நம்பிக்கையின்றி முதல்வர் விஜய் 2 இடங்களில் போட்டியிட்டார். 2 இடங்களில் வெற்றி பெற்ற அவர், ஒரு இடத்தில் ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், தொகுதி மக்களுக்கு இதுவரை ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை.
திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே, அவர்கள் உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ளார்கள். தற்போது, அதிமுக பிளவு பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு நடந்துதான் ட்விஸ்ட். அந்தப் பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது. பின்னாலேயே புதிய முதல்வரும் செல்கிறார். ‘புஷ்பா’ பட பாணியில் தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. மகளிர் உரிமை தொகைக்காக காத்திருக்கிறார்கள். குழந்தைகள் காலை உணவுத் திட்டத்துக்காக காத்திருக்கிறார்கள். நீங்கள் அவகாசம் கேட்டீர்கள். எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், காத்திருப்பவர்களை ரொம்ப காலம் காத்திருக்க வைத்து விடாதீர்கள். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக நடத்துங்கள். மக்கள் கேட்பதும் அதைத் தான்” .
இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.