தமிழக சட்டமன்றத்துக்கான சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று(மே 11) வேட்புமனுத் தாக்கல் செய்தார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றச் செயலாளர் அலுவலகத்தில் அவர் தனது மனுவை சமர்ப்பித்தார். கடந்த ஜனவரி மாதம், விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதனை 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார்.
தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் சார்பில் யாராவது வேட்புமனுத் தாக்கல் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை அவ்வாறு தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை இதற்கான தேர்தல் குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவையில் நடைபெறும். அதேபோல, துணை சபாநாயகர் பதவிக்கு திருச்சி மாவட்டம், துறையூர் (தனி)தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவிசங்கர் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.