தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று (மே 10) பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்
கொண்டனர். அதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (மே 11) தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர். இந்தநிலையில் முதல்வராக விஜய் பதவி ஏற்றதும் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்தவகையில் நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை செலுத்தினார். அப்போது முதல்-அமைச்சர் விஜய்க்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் சிலையை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இன்றைய தினம் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, முதல்வர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு விஜய் செல்ல இருக்கிறார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதல் அமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அண்ணாநகர் இல்லத்தில் சந்திக்க உள்ளதாகவும், இதேபோல மூத்த அரசியல் கட்சித் தலைவர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments are closed.