தமிழகத்தில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு ரிசல்ட் இன்று (மே 8) வெளியாகியுள்ளது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்விக்காக பிரபல தனியார் கலை அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சீட் கேட்டு தற்போதே விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் புரோக்கர்கள் சிலர், திருச்சியை சுற்றியுள்ள பிரபல தனியார் கல்லூரிகளில் அட்மிஷன் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தைகூறி கவர்ச்சி வலை விரிக்கத் தொடங்கிவிட்டனர். அட்மிஷன் பெறும் ஆசையில் இதை நம்பி தாங்கள் பாடுபட்டு சேர்த்த பணத்தை புரோக்கர்களிடம் கொடுத்து ஏமாந்தும் வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது., ” ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பிளஸ்-2 ரிசல்ட் வெளியாகும் சூழலில், இதுபோன்ற கல்லூரி அட்மிஷனுக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும். இதற்காக ரிசல்ட் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பே தமிழகத்தின் பிரபல கல்லூரிகளில் அட்மிஷன் பெற்று தருவது தொடர்பான விளம்பரங்களை சோசியல் மீடியாக்களில் அதிகமாக வெளியிடுகின்றனர்? இதை பார்க்கும் பெற்றோர்களும், தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய புரோக்கர்களை அணுகுகின்றனர். இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் புரோக்கர்கள், தனியார் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் இருக்கும் இடங்களுக்கு சீட் எதிர்பார்க்கும் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து அதில் ஒருபகுதியை தங்களுக்கான கமிஷனாக கல்லூரி நிர்வாகத்திடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர். இதனால், குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு அதிகமான கட்டணம் செலுத்தி ஏமாறும் நிலை உள்ளது. பெரும்பாலும் கிராமப்புறங்களை சார்ந்த மாணவர்களே இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிகள் சிலரும் இதற்கு உடந்தையாக இருக்கின்றனர். ஆகவே இதுபோன்று ஏமாறாமல் இருக்க சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கட்டணங்களை விசாரித்து விண்ணப்பிக்க வேண்டும். அட்மிஷன் தொடர்பான விபரங்களை கல்லூரிகளின் அதிகாரப்பூர்வ வெப்சைட் பக்கங்களுக்கு சென்று தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது. மிக முக்கியமாக தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் அட்மிஷன் பெறுகிற சூழல் வந்தால் மிக கவனமாக இருப்பது நல்லது” என்றனர்.

Comments are closed.